Youtube Link
https://www.youtube.com/watch?v=tQEO_PDrkHI
வேதபகுதி: 1சாமுவேல்26:25, அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்.
தேவனிடத்திலிருந்து நாமெல்லாரும் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதிலும் நாம் முதன்மையான ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் தேவன் அனைவரையும் முதல் இடத்தில் கொண்டு வந்து வைப்பது இல்லை, அப்படியானால் தேவன் நம் ஜெபத்தை கேட்பதில்லையா? காரணம் என்ன? தியானிப்போம்…
தேவன் என்னை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாரோ? அந்த ஸ்தானத்தைக் குறித்து திருப்தியாய் வாழ்ந்த ஒரு நபரைக் குறித்து இன்று தியானிக்க போகிறோம். அந்த நபர் யோனத்தான், யோனத்தான் என்பதற்கு தேவனுடைய பரிசு (அ) தேவனுடைய ஈவு என்று அர்த்தம்.
யோனத்தானைக் குறித்த அதிகாரங்கள்: 1சாமுவேல்16,18,19,20,23,30,31. 2சாமுவேல்1ம் அதிகாரம் தாவீது, யோனத்தானுக்காக பாடின ஒப்பாரி பாடல்.
யோனத்தான்:
1. விசுவாசத்தில் பயத்தை மேற்கொண்ட யோனத்தான்:
1சாமுவேல்13:22,23, சவுல் யோனத்தான் தவிர ஒருவர் கையிலும் பட்டயமும், ஈட்டியும் இல்லை. 1சாமுவேல்14:6ல். யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணையத்திற்குப் போவோம் வா: ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார், அநேகம்பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
இந்த யோனத்தானின் விசுவாசத்திற்காக கர்த்தர் கிரியை செய்தார். யோனத்தான் தேவனை நன்றாய் புரிந்து(அறிந்து) வைத்திருந்தான். நாம் தேவனை எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் விசுவாசம் அதிகரிக்கும். ஆண்டவரே உம்மை அறியும் அளவிற்கு உம்மை எனக்கு வெளிப்படுத்தும் என்று அவரிடம் கேட்க வேண்டும்.
உதா: ஆகார்- நீர் என்னைக் காண்கிற தேவனென்று, தேவனை புரிந்து கொண்டாள். ஒவ்வொரு நாளும் நாம் ஆராதிக்கிற தேவன் யார் என்ற புரிதல் நமக்கு வேண்டும். யோனத்தான் இந்த யுத்தத்தின் சூழ்நிலையிலும் தன் விசுவாசத்தினால் பயத்தை மேற்கொண்டான். 1சாமுவேல்18:1-4, யோனத்தான், தாவீது இருவருக்கும் தேவன் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார்.
2.தேவன் தந்த ஸ்தானத்தில் உண்மையாயிருந்தான்:
தாவீதைப் பார்த்தவுடன் சவுலுக்குள் காய்மகாரம் ஏற்பட்டது. அவர்கள் உறவானது சுற்றியிருந்த சகோதரிகளின் வார்த்தைகளினால் பிரிவை ஏற்படுத்தியது (1சாமுவேல்18:7-10). சீர்கேடான கிழவிகள் பேச்சுக்கு கவனமாய் இருக்க வேண்டும். யோனத்தானிடமும் அநேகர் தாவீது இருந்தால் நீ ராஜாவாக முடியாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் யோனத்தான் கர்த்தரின் சித்தத்தை புரிந்து கொண்டு சரியாய் செயல்பட்டான். (1சாமுவேல்20:31). யோனத்தான் தேவன் தனக்கு எந்த ஸ்தானத்தை கொடுப்பாரோ அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான்.(1சாமுவேல்23:16,17). நான் உமக்கு இரண்டாவதாய் இருப்பேன் என்றான். அவன் தேவசித்தத்தை சரியாய் புரிந்து கொண்டதினால் இப்படி தாவீதிடம் சொன்னான்.
ஏன் யோனத்தானுக்கும், தாவீதுக்கும் இடையே தேவன் உறவை ஏற்படுத்தினார்?
1சாமுவேல்18:3, நண்பர்களாய் இருக்க உடன்படிக்கை செய்து கொண்டார்கள். தாவீதின் உயிரை தப்புவிப்பதற்கு யோனத்தான் செயல்பட்டான். சோர்ந்துபோன தாவீதை பலப்படுத்தினான். சுயநலமற்ற அன்பை யோனத்தான் கொண்டிருந்தான்.
நம்மை சில உறவுகளோடு தேவன் இணைத்திருக்கிறார், அவர்களுக்கு நாம் யோனத்தானை போல் இருக்கிறோமா? எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தேவன் நம்மை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாரோ அதில் திருப்தியாய் வாழ வேண்டும்.
கர்த்தர் நம்மை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாரோ அதிலிருந்து நாம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.
ஆமென்.